![]() |
||||||||||||
| ||||||||||||
![]() ![]() கதிர்காம பாதயாத்திரை ஒருமாதகாலத்தின் பின்னர் மட்டுநகரில்!
வடக்கு – கிழக்கு – தெற்கு ஆகிய மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 54 நாட்கள் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை ஒரு மாத கால பாதயாத்திரையின் பின்னர் மட்டக்களப்பை வந்தடைந்தது.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து ஆரம்பமான வேல்சாமி தலைமையிலான இலங்கையின் நீண்ட பாதயாத்திரை ஒரு மாதகாலத்தின் பின்னர் மட்டக்களப்பு அமிர்தகழியை வந்தடைந்தது. ஆரம்பத்தில் 40 பாதயாத்திரீகர்களுடன் புறப்பட்ட வேல்சாமி தற்போது 95 அடியார்களுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றார்.
ஒருமாதகால அனுபவம் பற்றி வேல்சாமி...
நேற்றுக்காலை அமிர்தகழியிலிருந்து தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு ஒருமாதகால பயணம் பற்றி தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில் :
கடந்த ஒரு மாத கால பாதயாத்திரை இறையருளால் சுகமாகவிருந்தது. இடையிடையே மழை பெய்தது. வெயில் கூடவிருந்தாலும் காற்று எம்மை காப்பாற்றியது.
இயற்கையோடு இணைந்தது இந்துசமயம் .அதனால் நம்பிக்கையுடன் இந்த எட்டாவது வருடம் எனது தலைமையில் இப்பாதயாத்திரை இடம்பெற முருகனின் திருவருள் கைகூடியுள்ளது. இடைநடுவில் நானுட்பட 14 அடியார்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டபோதும் யாத்திரையில் தடங்கல் ஏற்படவில்லை.திராய்மடுவில் நேற்று சற்று ஓய்வெடுத்தோம்.செல்லுமிடமெல்லாம் பூரண ஆதரவு உதவிகள் உணவுகள் கிடைக்கின்றன. வெறுங்காலுடன் நடக்கையில் ஓர் அதிசயம்!
நாம் திருமலை கடலூரிலிருந்து மூதூருதுக்கு வர நீண்டதூரம் நடக்கவேணடியிருந்ததால் கடலூரிலிருந்து நடுச்சாமம் 2.00 மணிக்கு நடையை ஆரம்பித்து காலை 6மணியளவில் மூதூரை வந்தடைந்தோம்.
நான் வழமையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெறுங்காலுடன்தான் கதிர்காமம் நடந்து செல்வது.
மூதூரை வந்தடைந்தபோது திடிரென எனது காலில் பாரிய ஆணியொன்று ஏறிவிட்டது. மறுகணம் “முருகா” என்று காலைத் தூக்கியபோது அந்த இடத்தில் வெண்ணிறஆடையணிந்த ஒரு தாதியொருவர் வந்து எனது காலைப்பிடித்து ஆணியைக்கழற்றிவிட்டது மாத்திரமல்லாமல் மருந்தும் கட்டிவிட்டார். எனக்கு ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.உண்மையில் அது ஓர் அதிசயம்தான். அந்த நேரத்தில் அதுவும் மருந்துடன்... அனைத்தும் இறைசெயல் என்று பின்னர் நடந்தோம். சாணிகளை மிதித்து செல்லவேடியிருந்ததால் அடுத்த கதிரவெளி ஆஸ்பத்திரியில் எ.ரி.ரி. போட்டுக்கொண்டுசென்றோம்.
தொடரும் பயணம் பற்றி....
உகந்தை காட்டுப்பாதை திறக்கப்படும் தினத்தை மையமாகவைத்து கொக்கட்டிச்சோலை மற்றும் தாந்தாமலைக்கான இருநாள் யாத்திரையைத் தவிர்த்து இப்பாதயாத்திரை தொடரவுள்ளது. ஜூலை 16ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடையக்கூடியவாறு இவ் 54 நாட்கள் பாதயாத்திரை வடிவமைக்கப்பட்டு இறையருளால் கைகூடிவருகிறது.அடுத்துவரும் தினங்களில் மேலும் நூற்றுக்கணக்கான அடியார்கள் எம்முடன் இணைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரு தினங்கள் காரைதீவில்...
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவாகிய பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தனது குழுவினருடன் எதிர்வரும் 27ஆம் 28ஆம் திகதிகளில் இருதினங்கள் காரைதீவில் தங்கியிருப்பார்.
காரைதீவில் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயம் ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆயலம் நந்தவனச்சித்தி விநாயகர் ஆலயம் மாவடி கந்தசுவாமி ஆலயம் ஆகிய 04 ஆலயங்களில் தங்கியிருப்பார்கள்.
காரைதீவிலிருந்து சுமார் 50 இளம் அடியார்கள் தம்முடன் இணையவிருப்பதாகவும் தெரிவித்தார்.
உகந்தையில்...
உகந்தைமலை முருகனாலயத்தை ஜூலை மாதம் 06ஆம் திகதி சென்றடையத்திட்டமிட்டுள்ளோம். ஆலய திருப்பணிச்சபையினர் எம்முடன் அடிக்கடி தொடர்புகொண்டு ஒத்துழைப்பு நல்கிவருகின்றார்கள். நாம் உகந்தையில்தங்கவிருக்கும் தினங்களில் அன்னதானம் வழங்க தனவந்தர்களும் அமைப்புகளும் தயாராகவிருப்பதாக ஆலயசெயலாளர் கே.ஸ்ரீபஞ்சாட்சரம் நேற்றுமாலை தெரிவித்தார்.
அங்கு ஒரிருநாள் தங்கியிருந்து மறுநாள் காட்டுப்பாதையூடாக யால காட்டிற்குள் பிரவேசித்து 07 தினங்களின் பின்னர் ஜூலை 16 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைய இறையருள் கைகூடியுள்ளது என்று தெரிவித்தார்.
தகவலும் படங்களும்:
காரைதீவு நிருபர்
|